கோடைக்கு முன்பே தலைகாட்டும் வறட்சி: வனப்பகுதியில் இருந்து வெளியேறி பயிர்களை நாசமாக்கும் விலங்குகள்...தத்தளிக்கும் தர்மபுரி விவசாயிகள்; உயிரிழப்புகளும் தொடரும் அவலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை துவங்கும் முன்பே, வறட்சி தலைகாட்டி வருகிறது. இதன் எதிரொலியாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் வனப்பரப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தர்மபுரி முதலிடத்தில் உள்ளது. தர்மபுரி மண்டல வனப்பகுதி 3 ஆயிரத்து 245.17 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த வனப்பகுதியாகவும் தர்மபுரி மண்டல வனப்பகுதி உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய வனச்சரக பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. வனத்தை ஒட்டியுள்ள சாலையில் யானைகள் அதிகம் நடமாடுகின்றன. ஒகேனக்கல், அஞ்செட்டி, உரிகம், சானமாவு போன்ற வனப்பகுதி சாலையில் காலை, மாலை நேரங்களில் யானைகள் நடமாடுவதை பார்க்க முடிகிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் பகுதியில் யானை ஒருவரை மிதித்து கொன்றது. அதேபோல் அஞ்செட்டி பகுதியிலும் யானை தாக்கி ஒருவர் பலியானார். உணவு, தண்ணீர் தேடி சுற்றித்திரியும் யானைகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஒகேனக்கல் காவிரி, சின்னாறு படுகை பகுதிகளில் யானைகள் வாழ்விடமாக உள்ளது. காவிரி படுகை பகுதியை பொறுத்த வரையில் ஆண்டுதோறும் யானைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த போதும், அங்கிருந்து இடம் பெயர்ந்து சின்னாறு படுகை பகுதிக்குள் வலம் வருகிறது. தற்போது உணவு கிடைக்காமல் சின்னாறு படுகை பகுதியான கோடுப்பட்டி, கோயில்பள்ளம், தாசம்பட்டி பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் சின்னாற்றின் குழியில் தேங்கிய நீரை யானை மற்றும் வனவிலங்குகள் குடிப்பது வழக்கமாகி உள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வனத்தைவிட்டு வெளியே வந்து காவிரியில் தண்ணீர் குடித்து மீண்டும் காட்டுக்குள் யானைகள் சென்று விடுகின்றன.

தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, யானைகள் உணவுக்காக வனப்பகுதியில் உள்ள விஷ காய்கள் மற்றும் உதிர்ந்து சருகாகி போன இலைகள் உள்ளிட்டவைகளை சாப்பிடும் போது, குடல் நோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே வனத்துறை முன்னதாக யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்னாகரம் தாலுகா வட்டுவனஅள்ளி பஞ்சாயத்து கோட்டூர்மலை, ஏரிமலை, ஆலக்கட்டு மலை வனப்பகுதி ஒட்டியுள்ள விளைநிலங்களில் யானைகள் ராகி, அவரை தோட்டங்களை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் காரிமங்கலம் டி குன்றில் தஞ்சம் அடைந்துள்ளது. இந்த யானைகள் வந்த பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் பரிதவித்து நிற்கின்றனர். ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளை அவ்வப்போது மட்டும் விரட்டுவதால் பலனில்லை. அவை வனத்தில் இருந்து வெளியேறாத வகையில் நிரந்தரமாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் வன உரியின ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

காட்டை அழிப்பதால் ஊருக்குள் வருகிறது: வனஉயிரின ஆர்வலர்கள்  தகவல்

வனஉயிரின ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தர்மபுரி மண்டலத்தில் 2 வனக்கோட்டம்  உள்ளது. இதில் தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டத்தில் அதிகளவில் யானை நடமாட்டம்  உள்ள பகுதியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி 520  யானைகள் தர்மபுரி மண்டலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.  யானைகள்  தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்காது.  இடம்விட்டு இடம் சென்றுகொண்டே  இருக்கும். தற்போது 300 முதல் 350 யானைகள்  குடும்பம் குடும்பமாக உள்ளன.  கர்நாடகாவில் இருந்து யானைகள் அதிகம்  வருகின்றன. காட்டை அழித்து  விளை நிலமாக்குவதும், கட்டிடம் கட்டுவதுமே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதற்கு வழிவகுக்கிறது,’’ என்றனர்.

விலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கைகள்: அதிகாரிகள் உறுதி

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊருக்குள் யானைகள் வராமல் தவிர்க்க  ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு,  தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் போன்ற பகுதியில் மின் வேலி  அமைக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகத்தில் சோலார் மின்வசதியுடன்  கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து, தொட்டியில் தண்ணீர் நிரப்படுகிறது. பாலக்கோடு  வனச்சரகத்தில் மட்டும் 5 இடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  சின்னாற்றில் யானைகள் தண்ணீர் குடித்து செல்லும்வகையில் தண்ணீர்  தொட்டிபோன்று குழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

சட்டமன்றத்தில் பேசியும் உரியதீர்வு கிடைக்கலை : தொகுதி எம்எல்ஏ ஆதங்கம்

தர்மபுரி தொகுதி எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி கூறுகையில், யானை, காட்டுப்பன்றிகளால் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் அதிகம் சேதப்படுத்தப்படுகிறது. குறிப்பாக காட்டு பன்றிகளால் தான், சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. மாவட்டத்தில் பல  ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று  சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறேன். இதேபோல் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் உடனுக்குடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனாலும் உரிய தீர்வு கிடைப்பதில் தாமதம் தொடர்கிறது,’’ என்றார்.

பயன்பாடு இல்லாமல் சோலார் மின்வேலிகள்: விவசாயிகள் சங்கம் அதிருப்தி  

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில், வனப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், விவசாய நிலத்துக்குள், காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகாமல் இருக்க, சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. அது, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், தற்போது செயலிழந்துள்ளது. இதனால் இவற்றை தாண்டி, காட்டு யானைகள், காட்டு பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதை தடுக்க, வனத்துறையினர், தர்மபுரி மாவட்டம் முழுவதும், வனபகுதியில் அமைக்கப்பட்டுள்ள, சோலார் மின் கம்பிகளின் செயல்பாடு குறித்து, சோதனை செய்து, சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.

ஓராண்டு ஆகியும் இழப்பீடு வரவில்லை: விவசாயி வேதனை

விவசாயி சக்திவேல் கூறுகையில், ‘‘வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்திய பிறகு அதிகாரிகள் கணக்கெடுக்க வருகின்றனர். ஆனால் இழப்பீடு உரிய  நேரத்தில் வழங்கப்படுவதில்லை. காலம் கழித்து வழங்குவதால் அந்த நிவாரணம் பயனுள்ளதாகவும் இருப்பதில்லை. கடந்தாண்டு இழப்பீடு கூட, பலருக்கு இதுவரை வந்து சேரவில்லை. எனவே வனத்துறை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை விட காட்டுபன்றிகளால் தான் அதிகமாக பயிர்கள் சேதமாகிறது,’’ என்றார்.

Related Stories: