பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு தொடங்க காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணை: 14.2.2019 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, விவசாயிகளின் நலனை காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன்புதூரில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம் ஒடையகுளம் கிராமத்தில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறைக்கு சொந்தமான 0.40.5 ஹெக்டேர் நிலத்தில் வி.கே.பழனிசாமி கவுண்டர் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபமும், நூலகமும் அமைக்கப்படும். இந்த மணிமண்டபம் அமைக்க 2019-2020ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ₹1 கோடிக்கான திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், ₹5 லட்சத்துக்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கப்படுகிறது. பீடத்துடன் கூடிய வெண்கல திருவுருவ சிலை அமைக்க ₹8 லட்சம் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. மணிமண்டபம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பின்னர், மணிமண்டபத்தை பராமரிக்க ஒரு காப்பாளர், ஒரு காவலர், ஒரு துப்புரவாளர் பணியிடங்களும் தோற்றுவிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.

பொதுப்பணி துறையால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடுகளில் அரசின் முன் அனுமதியின்றி எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ள கூடாது. பணிகள் நிறைவடைந்த பிறகு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநரிடம் முழுமையான பயன்பாட்டு சான்றிதழை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சி தலைவர் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்.

Related Stories: