விமான பயணிகளிடம் கொரோனா வரி வசூல்: தனியார் பராமரிப்பு விமான நிலையங்கள் திடீர் முடிவு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு சோதனைகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட விமான பயணிகளிடம் இருந்து கொரோனா வரி வசூலிக்க தனியார் பராமரிப்பு விமான நிலையங்கள் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா வைரஸ் பீதி உலகமெங்கும் பரவி உள்ளது. வரைஸ் தாக்குதல் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 21 விமான நிலையங்களில்  கொரோனா சோதனைகள் நடைபெற்று வருகிறது. விமானத்தில் வரும் பயணிகளின் உடல் சூட்டை கண்டறிய தெர்மல் ஸ்கேனர்கள் கருவிகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான கட்டணமும் கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கிடையே, பயணிகளிடம் கொரோனா சோதனை வரி வசூலிக்க தனியார் நிர்வகிக்கும் விமானநிலையங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி பராமரிப்பு விமான நிலையங்கள் தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விமான நிலையங்களில்தான் கொரானா வரி வசூலிக்கப்பட உள்ளது.

தனியார் விமான நிலையங்களின் இந்த முடிவு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சர்வதேச வான் போக்குவரத்து சங்கமும்(ஐஏடிஏ) கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. ‘‘ஏற்கனவே கொரோனா பீதியால் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், விமான நிறுவனங்கள் கடும் நிதிநெருக்கடியில் உள்ளன. இந்தநிலையில், வருகின்ற கொஞ்சநஞ்ச பயணிகளையும் பாதிக்கும் வகையில் கொரோனா வரி விதிக்கக் கூடாது. தங்கள் லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு தனியார் விமான நிலையங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது தவறானது. இப்படி கொரோனா வரி விதிக்கப்பட்டால், அந்த விமான நிலையத்தையே தவிர்க்க பயணிகள் முயல்வார்கள். இது தனியார் விமான நிலையங்களுக்கு மேலும் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். இதை உணர்ந்து, தனியார் விமான நிலையங்கள் செயல்பட வேண்டும் என்று ஐஏடிஏ இந்திய பிரிவு இயக்குனர் அபிதாப் கோஷ்லா வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தனியார் விமான நிலையங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிக்கு விலக்கு அளிக்க  மத்திய சிவில் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் விமான நிலையங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories: