ம.பி. காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ராஜினாமா ஏற்பு: சபாநாயகர் நர்மதா பிரசாத் அறிவிப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜ.வில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் திடீர்  மாயமாகினர். ஆட்சியை கவிழ்க்க பா.ஜ சதி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட  22 எம்.எல்.ஏக்கள் திடீரென தனி விமானத்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜோதிராதித்யாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிலநாட்களுக்கு முன் பா.ஜ.வில் இணைந்தார்.  அதனால், மத்தியப் பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து, மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனை முதல்வர் கமல்நாத் நேற்று காலை 11 மணிக்கு சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார். ஆளுநரிடம் அவர் அளித்த புகார் மனுவில், ‘காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள்  22 பேரை, பா.ஜ. கட்சி பெங்களூர் கொண்டு சென்று குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விடுவிப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். திங்கட்கிழமை பட்ஜெட்  கூட்டத் தொடர் தொடங்கும்போது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக உள்ளேன். எனக்கு எதிராக செயல்பட்ட 6 அமைச்சர்களை நீக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முதல்வர் கமல்நாத் செய்த பரிந்துரையின்படி ஜோதிராதித்யாவின் ஆதரவு அமைச்சர்களான இமாரதி தேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யும் சிங் தோமர், பிரதுராம் சவுத்திரி ஆகிய 6  பேரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமா  கடிதத்தை சபாநாயகர் நர்மதா பிரசாத் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் நடைபெறவுள்ள மத்திய பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு  வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: