இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்திவைப்பதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலையில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் நேற்றிரவு உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்கள் முடங்கி உள்ளன. திருப்பதி கோயிலில் பக்தர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்திவைப்பதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

Related Stories: