திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி: சிறப்பு முகாம் தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பம் குறித்து ஆய்வு செய்த பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதற்காக வாரிமெட்டு, அலிபிரி ஆகிய இரண்டு மலைப்பாதைகளில் திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களையும், வாகனங்களில் திருமலைக்கு செல்லும் அனைத்து பக்தர்களையும் அலிபிரி சோதனை சாவடி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியப்படுகிறது.

இதில் 100 டிகிரிக்கு மேல்  உடல் வெப்பம் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக  அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் விதமாக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாவட்ட கலெக்டர் நாராயண பரத்குப்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையம் பக்தர்கள் ஓய்வறையில் கொரோனா வைரஸ் பாதிக்கக் கூடியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஐசியு வார்டாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள தேவஸ்தான சத்திரத்தையும் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக காத்திருப்பார்கள். இதில் சாதாரணமாக 500 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஒரு அறையில் 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: