கோவையில் மூதாட்டிக்கு கொரோனா அறிகுறி? அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை:  கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை வழியாக மார்ச்  8ம் தேதி கோவைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சளி மாதிரிகள் எடுத்து சென்னை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த மூதாட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சவுதி அரேபியாவில் இருந்து வந்துள்ள மூதாட்டிக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது.

மற்றபடி தொண்டை வலி, சளி போன்ற கொரோனாவிற்கான வேறு எந்த தொற்றுகளும் இல்லை. நிமோனியா வகை காய்ச்சலே உள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியாவும் இல்லை. இருந்தாலும் மெக்காவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தப்பிறகே உறுதியாகத் தெரியும், என்றார்.

Related Stories: