பக்தர்கள் பரவசம்; முக்தீஸ்வரர் கோயில் கருவறையில் சூரிய கதிர்கள்: 23ம் தேதி வரை காணலாம்

மதுரை: மதுரை முக்தீஸ்வரர் கோயில் கருவறையில் சூரியனின் கதிர்கள் பிரவேசிக்கும் அரிய நிகழ்வு இன்று காலை நடந்தது. வரும் 23ம் தேதி வரை தினமும் காலையில் சூரியக் கதிர்கள், கருவறைக்குள் பிரவேசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் இன்று காலை நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதுரை தெப்பக்குளம் மேற்கு பகுதியில், உள்ள மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவைறக்குள் பிரவேசிக்கும். அப்போது முக்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இன்று காலை 6.35 மணி அளவில் சூரியக் கதிர்கள் கோயில் மேற்கூரை வழியாக கருவறைக்குள் பிரவேசித்தன. அது 6.45 மணி வரை நீடித்தது. பின்பு மீண்டும் காலை 7 மணி முதல் 7.10 மணி வரை மீண்டும் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையை பிரகாசிக்கச் செய்தன. அப்போது, சுவாமிக்கு பல வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. சூரியக் கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும் இந்த அரிய நிகழ்வை காண பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். வரும் 23ம் தேதி வரை தினமும் காலை சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவறைக்குள் பிரவேசிக்கும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: