‘மகாநதி’ ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘மகாநதி’ ஷோபனா பாடிய ‘கந்த சஷ்டி கவசம்’ பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மகாநதி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசை கலைஞரான இவர் கடந்த 1995ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “ டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” ஆகிய இரண்டு ஆல்பங்களை  பாடி உள்ளார். இந்த இரண்டு ஆல்பங்களும் ‘‘சிம்பொனி’’ மற்றும் ‘‘பக்தி எப்.எம்’’ என்ற பெயரில் ‘யூ டியூப்’பில் வெளியிடப்பட்டது. தற்போது 4.7 கோடிக்கும் அதிகமானோர்  இந்த ஆல்பத்தை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லாது என்று ஷோபனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹர அருண் வாதிட்டார்.

அவருடைய முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து பாடல்களுக்கு பயன்படுத்தியது சட்டவிரோதமானது. எனவே, இந்த இரண்டு ஆல்பங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘மகாநதி’’ ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் மற்றும் ‘‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’’ ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: