சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் மூடல்: பலர் டிஸ்சார்ஜ் ஆனதால் மகிழ்ச்சி

வூகான்: சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா என்ற கொடிய வைரசால் சீனாவின் வூகான் மாகாணம் சூழப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வைரஸின் ஆதிக்கம் சீனா முழுக்க பரவி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தபோது கொரோனா வைரஸ் சிகிச்சைககாவே வெறும் பத்தே நாட்களில் 15 அவசர சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது. வைரசுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே மூண்ட போராட்டத்தில் இதுவரை 44,518 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தீவிரத்தை தாண்டிய 3,136 பேர் பலியாகியுள்ளனர். ஹுபேய் மாகாணத்தில் வாழும் மக்கள் சுமார் 5 கோடி பேர் சீனாவின் பிறபகுதிகளுக்கு செல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மூன்றே மாதங்களுக்குள் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொன்று குவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு இணையதளம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட 15 அவசர சிகிச்சை மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வரவு குறைந்து விட்டதால் இந்த மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது. மேலும், வூகான் நகரில் 6 நாளில் 1,000 படுக்கைகள் கொண்ட 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மருத்துவமனை விரைவில் மூடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அந்நாட்டினர் மகிழ்ச்சி பொங்கிட நாட்டு கொடிகளை கையில் ஏந்தி கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: