பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் சாலமன் (18). வண்ணாரப்பேட்டை டி.எச். ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஜெ.பி.கோயில் தெருவில் உள்ள கடையில், தனது நண்பர்கள் சந்தோஷ், அசோக்குமாருடன் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர், சாலமன் மற்றும் அவர்களது நண்பர்களை மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணம், செல்போன்களை கேட்டனர்.

ஆனால், இவர்கள் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலமன் மற்றும் நண்பர்களை வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு, சேரன் தெருவை சேர்ந்த மல்லிகா (49), நேற்று காலை பாலவாயல் மின்வாரிய அலுவலக பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், ஒரு காகிதத்தை கொடுத்து முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, திடீரென அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட மல்லிகா செயினை பிடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி, அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: