ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீ பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்: ஏடிஎம் இயந்திரத்தில் பல லட்சம் தப்பியது

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். தினமும் சிறப்பு பூஜைகள் நடை பெறுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் ஒன்று உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், வடை, முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படும். இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் போது பிரசாத ஸ்டால்களும் அடைக்கப்படும். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு பிரசாத ஸ்டால் மூடப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற விஸ்ரூப தரிசனத்துக்காக அதிகாலை 4 மணியளவில் பட்டர்கள், ஊழியர்கள் கோயில் நடையை திறந்தனர். அப்போது கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதில் மண்டபம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததை பார்த்த பட்டர்கள், ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை போராடி அணைத்தனர். அதற்குள் ஸ்டாலில் இருந்த பிரசாதங்கள் சாம்பலானது.  மின்சார விளக்குகள், ஒயர்கள் கருகின. மண்டபம் முழுவதும் கரும்புகையாக இருந்ததால் கோயில் துப்புரவு பணியாளர்கள் கழுவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. கோயில் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பிரசாத ஸ்டாலின் அருகே இருந்த கோயில் இ-உண்டியல், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் தப்பியது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். கோயிலில் நடைசாத்தும்போது சாம்பிராணி காட்டுவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு சாம்பிராணி காட்டிய போது தூபகாலிலிருந்து பரவி தீ பிடித்ததா அல்லது மின்கசிவால் தீ பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலில் தீ விபத்தால் விஸ்வரூப தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: