கள்ளிக்குடி அருகே மேற்கூரை சேதமடைந்து மக்களை அச்சுறுத்தும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்: சீரமைக்க வலியுறுத்தல்

திருமங்கலம்: மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்டது கூடக்கோவில். மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் திருமங்கலம் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1989ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. இங்கு கூடக்கோவில், டி.கொக்குளம், திருமால், அரசபட்டி, தூம்பகுளம், எஸ்.பி.நத்தம், உலகாணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கடந்த 1994ல் கூடக்கோவில் கொக்குளம் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது அதில் செயல்பட்டு வருகிறது.

இரண்டு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆய்வக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும் 150 முதல் 200 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. மருத்துவமனை நுழைவுவாயில் மேற்கூரை, மருத்துவர் அறையின் ஷன்சைடு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கூரையின் காரைப்பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் உள்ளதால் நோயாளிகள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில், காரை பெயர்ந்து காணப்படும் பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் செல்லக்கூடாது என்பதால் கயிறு கட்டப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘94ல் கட்டப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மராமத்து செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் சார்பில் பொதுப்பணித்துறைக்கு பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மராமத்து பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் உண்டாகும் முன்பு கூடக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இந்த மருத்துவமனையின் கீழ் எஸ்.பி. நத்தம், அரசபட்டி, தூம்பகுளம் கிராமங்கள் வருகின்றன. இந்த கிராமங்களில் இருந்து கூடக்கோவிலுக்கு நேரடி பஸ்கள் கிடையாது. இதனால் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அரசபட்டி, எஸ்பி நத்தம், தூம்பகுளம் பகுதியிலிருந்து கூடக்கோவிலுக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: