குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்டாவில் 24வது நாளாக இஸ்லாமியர் போராட்டம்: சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

திருச்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்டாவில் 24வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள அத்தர் பள்ளிவாசல் முன் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகிறது. இன்று 24வது நாளாக ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு எஸ்டிபிஐ சார்பில் நாளை(10ம் தேதி) வரை 5 நாட்களுக்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 3ம் நாளாக நேற்று நடைபெற்ற தொடர் போராட்டத்திற்கு தஞ்சை எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பாபநாசம் அருகே உள்ள சக்கராபள்ளியில் 19வது நாளாகவும், கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே 20வது நாளாகவும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், முத்துப்பேட்டையில் 24வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது.

அதேபோல் மயிலாடுதுறை சின்னபள்ளிவாசல் தெருவில் 13வது நாளாகவும், புதுக்கோட்டை கலீப் நகர் 4ம் வீதியில் 13வது நாளாகவும், கறம்பக்குடி புளியன்சோலை பகுதி மதரசா பள்ளிவாசல் 20வது நாளாகவும், மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் 22வது நாளாகவும், நாகூர் சியா மரைக்காயர் தெரு, திருவாரூர் அடியக்கமங்கலம் ஆகிய இடங்களில் 10வது நாளாகவும் இன்று போராட்டம் நடக்கிறது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமிய அமைப்பினர் இன்று 23வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்க உள்ளதால் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதுவரை கலையமாட்டோம் எனவும் திட்டவட்டமாக கூறிய இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: