வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் கலைகட்டியுள்ள ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள்!

மதுரா: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் இன்று நாளையும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பக்தர்கள் கோவிலில் திறண்டு வழிபாடு நடத்தினர். அப்போது பக்தர்கள் மீது கலர் பொடி வீசப்பட்டது. ஹோலி பண்டிகையில் வகுப்பு மோதலை தவிர்க்கும் வகையில் அலிகாரில் மசூதி ஒன்றை தார்ப்பாய் வைத்து போலீசார் மறைத்தனர். கலர் பொடி வீசும்போது அவை மசூதியில் பட்டு கறை படாமல் இருக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலம் வைஷாலியில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தீமைக்கு முடிவு கட்டும் வகையில் உருவ பொம்மைக்கு தீமூட்டினார். அப்போது, திடீரென வெடிகள் சிதறியதால் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்களும் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கலர் பொடிக்கு பதில் பூக்களை வீசி மக்கள் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல இடங்களில் முகக் கவசம் அணிந்தபடியும் மக்கள் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: