உலகப்புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடங்கியது: கொரோனா தாக்குதல் இருந்த போதிலும் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: உலகப்புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. இருப்பினும், பெண்கள் மட்டுமே பொங்கலிடும்  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இங்கு உள்ளது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும்  புராணம் கூறுகிறது. மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன்  நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்காலை விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம். கோவிலின் முன்பு  பொங்கல் வைக்கும் போது, கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மனான கண்ணகியும், ஒரு பெண்ணாக கோவி லின் முன்பு வந்து, பெண்களோடு பெண்களாக பொங்கலிடுவார் என்பது இக்கோவிலுக்கு வரும் பெண்களின்  நம்பிக்கை.இதனையடுத்து, இன்று மாசி மாதம் 09-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலின் முன்பில் இருந்து நகர் முழுவதும் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா வைரஸ்  தாக்குதலில் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொங்கல் விழாவை தவிர்க்க முடியாது என மாநில மக்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் நடைபெறும் பொங்காலை திருவிழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது. இதற்காக  ஒவ்வொரு பொங் காலை விழாவிலும் பெண்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இவ்வாறு கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15  லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இது போல 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இது இக்கோவிலின்  முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: