சேலம், கரூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பளம் கிடைக்காமல் போலீசார் கடும் அவதி: புதிய சாப்ட்வேரில் குளறுபடி

சேலம்: சேலம், கரூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாருக்கு இதுவரை பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததால், கடும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய சாப்ட்வேர் மூலம் ஆன்லைனில் சம்பளம் வழங்கும் முறை அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த முறை முழுமையாக நடைமுறைக்கு வர இருப்பதாக  கூறப்படுகிறது. தற்போது சோதனை அடிப்படையில் சேலம், கரூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் புதிய சாப்ட்வேர் மூலம் சம்பளம் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை விப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த சாப்ட்வேரில், சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் பட்டியலை பதிவேற்றம் செய்து, மாத சம்பளத்தை குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். ஆனால், அதிக பணியாளர்கள்  கொண்ட துறையில், சரிவர பதிவேற்றம் ஆகாமல் சம்பளம் பட்டுவாடா ஆகவில்லை. பிப்ரவரி 29ம் தேதி, கிடைக்க வேண்டிய சம்பளம் நேற்று (8ம் தேதி) வரையில் வழங்கப்படவில்லை.  இதன் காரணமாக சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் போலீசார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதால், அவர்களின் சம்பள பட்டியல் புதிய சாப்ட்வேரில்  அப்டேட் ஆகவில்லை. இதன் காரணமாக சேலம், கரூர் உள்பட பல மாவட்டங்களில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

சேலம் மாவட்டத்தை பொருத்தளவில், மாநகரில் பணியாற்றும் 1,500 போலீசார், மாவட்டத்தில் பணியாற்றும் 1,900 போலீசார் சம்பளம் கிடைக்காமல் கடும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வாடகை வீட்டில் குடியிருக்கும் போலீசாரால், இன்னும்  வாடகை தொகையை கொடுக்க முடியவில்லை. அதேபோல், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய போலீசாரால் இஎம்ஐ உள்ளிட்ட மாத தவணை தொகையை செலுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுபற்றி சேலம் போலீசார் கூறுகையில், “புதிய சாப்ட்வேர் மூலம் சம்பளம் வழங்குவதாக கூறி, இன்றைய தேதி வரை ஊதியத்தை வழங்காமல் உள்ளனர். சாப்ட்வேர் பதிவேற்ற குளறுபடியால் இன்னும் வழங்க முடியவில்லை என உயர்  அதிகாரிகள் பதிலாக கூறுகிறார்கள். அவசரகதியில் அமலுக்கு கொண்டு வந்து, எங்களை பரிதவிக்க விட்டுள்ளார்கள்,’’ என்றனர்.

போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “புதிய தொழில்நுட்ப முறையில் சம்பளம் வழங்குவதில், பதிவேற்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனை விப்ரோ நிறுவன அதிகாரிகள் சரிசெய்து கொண்டுள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் அனைவருக்கும்  சம்பளம் கிடைத்துவிடும்,’’ என்றனர்.

Related Stories: