கரைவெட்டியில் களையிழந்த பறவைகள் சரணாலயம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகஅரியலூர் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கரைவெட்டி பறவைகள்  சரணாலயம். அரியலூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சரணாலயம் 1957 ல் காமராஜரால் உருவாக்கப்பட்டது. கரைவெட்டி  கிராமத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரத்து நூறு ஏக்கருக்கும் மேல் உள்ள கரைவெட்டி ஏரியானது மேட்டூரில் திறந்துவிடப்படும் தண்ணீர் திருச்சி  முக்கொம்பு வந்தடைந்து புள்ளம்பாடி பாசன வாய்க்கால் வழியாக இந்த ஏரியில் தேங்குகிறது. இந்த சரணாலயம் திமுக ஆட்சிகாலங்களில்  சுற்றுலாவிற்கு உகந்த வகையில் கழிவறை, ஓய்வெடுக்கும் அமர்வு நாற்காலி, ஏரியின் நான்குபுறமும் உயரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் வகையில்  உயர்பார்வை கோபுரங்கள் போன்றவைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் தற்பொழுது மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன்  சுற்றுலாவுக்கு வருகைதரும் பார்வையாளர்கள் நீண்ட நேரம் பார்வையிடும் வகையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன்  திரும்பிச்செல்கின்றனர். தற்போது மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்தும் வருகைதரும் வெளிநாட்டு  பறவைகள் கிழக்கு ஆசிய பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வரித்தலை வாத்துகள், கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல்நிற  கொக்கு, மைகால் கோழி, ஆலா, கரண்டி மூக்கன், நத்தைகொத்தி நாரை, பாம்புநாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குறிபான், வண்ண நாரை,  மடையான், உண்ணிகொக்கு, நாமக்கோழி, சிறைவி, நீர்காகம் உள்ளிட்ட பறவைகளும் அபூர்வ நீர்வாழ் உயிரினங்களும் இந்த கரைவெட்டி பறவைகள்  சரணாலயத்தில் வாழ்ந்து வருகின்றன.

ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதாக பறவைகள் ஆர்வலர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் சிவசுப்பிரமணியன்  தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுற்லுலா பயணிகளும் கரைவெட்டி பகுதி விவசாயிகளும் தெரிவிக்கையில் கரைவெட்டி ஏரி பறவைகள்  சரணாலயத்தில் சாலை வசதி, மின்விளக்கு, கழிவறை, பயணிகள் ஓய்வு எடுக்கும் அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் பராமரிக்கப்படாமல்  உள்ளது ஏமாற்றம் அளிப்பதாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வருகை தரும்  அளவுக்கு சீர்படுத்த வனத்துறையினர் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரைவெட்டிபகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்வதாகவும், இங்கு வரும்  வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் விளையும் தானியப்பொருட்கள் நிலங்களில் சிதறிக்கிடப்பது உணவாக  பயன்படுவதே ஆகும் என தெரிவிக்கும் விவசாயிகள், பரந்து விரிந்து கிடக்கும் அதிக பரப்பளவு கொண்ட இந்த ஏரியினை வறட்சிக்காலங்களில்  தூர்வாரி அதிக அளவில் தண்ணீர் தேக்கினால் ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும், ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதற்கும் ஏதுவாக  அமையும் என கருத்து தெரிவித்துள்ளனர். இனிவருங்காலங்களிலாவது இந்த சரணாலயத்திற்கு ஒதுக்கப்படும் நிதிகளை முறையாக செலவிடப்பட்டு  அனைத்து தரப்பினரும் பயமின்றி வரும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Related Stories: