சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் சுவரை துளையிட்டு திருடி வந்த பிரபல கொள்ளையன் கைது: வீடு, நிலங்கள் வாங்கி குவித்தது அம்பலம்

சென்னை: சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் சுவரை துளையிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் சொந்த ஊரில் வீடு, நிலங்களை வாங்கி குவித்தது அம்பலமாகி உள்ளது. சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலை பல்லக்கு மாநகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மாதம் 24ம் ேததி காலை, டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஊழியர் ராஜப்பாண்டி ஆகியோர் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கடையில் பணம் வைத்திருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே பெட்டியை பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.14.70 லட்சம் மாயமாகி இருந்தது. கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படாமல் எப்படி கொள்ளையர்கள் உள்ளே வந்தனர் என்று டாஸ்மாக் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையன் உள்ளே வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து டாஸ்மாக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கடையின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையரை தேடி வந்தனர். ்இந்நிலையில், சிசிடிவி பதிவில் கிடைத்த கொள்ளையன் படத்தை தரமணி, கோடம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுட்பட்ட கொள்ளையன் குபேரன் (எ) சிவா (42) உருவத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது, இரண்டும் ஒன்றாக இருந்தது.  அதைதொடர்ந்து மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில் தனிப்படையின் தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று அதிகாலை வேலூரை மாவட்டம் கருகாம்புத்தூரில் உள்ள சொந்த கிராமத்தில் கொள்ளையன் குபேரன் (எ) சிவா (42) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, சுத்தி, கத்தி முகமூடி பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் திருவான்மியூர், தரமணி, வண்ணாரப்பேட்டை, திருமுல்லைவாயல், கோடம்பாக்கம், வடபழனி மற்றும் திருவள்ளூர், வேலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோட்டமிட்டு, சுவரை துளையிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு தனது சகோதரர் மற்றும் மகன் பெயரில் சொந்த கிராமமான கருகாம்புத்தூரில் பெரிய வீடு கட்டியுள்ளதும், நிலங்கள் வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்தது.  அதைதொடர்ந்து கொள்ளையன் குபேரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: