கத்திவாக்கம் பஜார் தெருவில் சிதிலமடைந்த சமுதாயக்கூடம் இடிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்குட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கத்திவாக்கம் நகராட்சியாக இருந்தபோது கட்டப்பட்ட இந்த சமுதாயக்கூடத்தை அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில், இந்த பகுதி மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு இந்த சமுதாயக்கூடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இடிந்து விழும் நிலையில் இருந்தது.  இதனால், இங்கு சுப நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சமுதாயக்கூடம் மூடப்பட்டது.  இந்த கட்டிடம்  இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உள்ளது என்றும், எனவே இதை இடித்துவிட்டு, புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

 இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பேரில், திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள், இந்த சமுதாயக்கூடத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்தனர்.   இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிதிலமடைந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய சமுதாயக்கூடம்  கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: