திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து தொழிலாளி உடல் கருகி பலி: மற்றொருவருக்கு பலத்த தீக்காயம்

திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பலியானார். மற்றொருவர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குளக்கட்டாகுறிச்சியில், பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் டிஆர்ஓ லைசென்ஸ் பெற்று கம்பி மத்தாப்பு, தரை சக்கரம் உள்ளிட்ட பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது. இங்குள்ள 7 அறைகளில் 39 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.நேற்றும் வழக்கம்போல் தொழிலாளர்கள், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். மதியம் 12.30 மணியளவில் 3வது அறையில் 2 தொழிலாளர்கள் தரை சக்கரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெயில் சுட்டெரித்ததால், மருந்துகள் சூடானது. எதிர்பாராத நேரத்தில் மருந்துகள் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தன. இதனால் பட்டாசு மற்றும் பட்டாசு செய்ய பயன்படும் மருந்துகள் தீப்பிடித்தது.

அறையில் வேலை செய்து கொண்டிருந்த சேவுகபாண்டியன்(31) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். பலத்த தீக்காயமடைந்த மாரியப்பன் (38) என்பவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த திருவேங்கடம் போலீசார், சேவுகபாண்டியன் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நெல்லை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: