பன்னாட்டு சமூகம் கண்டித்த ஒருவரை துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக நியமிப்பதா?: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: பன்னாட்டுச் சமூகம் கண்டித்த ஒருவரை துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக நியமிப்பதா என்று தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதிமுக பொது செயலாளர் வைகோ: தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தோரை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார். தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிந்துரை செய்துள்ளார்.

கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடிய பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கடந்த ஜனவரி 5ல் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையையும் ஏவி விட்டு மாணவர்கள், பேராசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் பின்னணியில் இருந்தவர் ேஜ.என்.யு. பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார். ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பிலிருந்து ஜெகதீஷ்குமாரை நீக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 747 பேர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டனர். அத்தகைய நபரை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு  தலைவராக தமிழக ஆளுநர் நியமித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.  

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான தேடுதல் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் சர்ச்சைக்குரியவர். நூற்றாண்டு கால வரலாறும் சிறப்பும் மிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு மிகச்சிறந்த அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட கல்வியாளர் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். அத்தகைய கல்வியாளர்கள் பலரும் தமிழகத்தில் உண்டு. அதுபோன்ற ஒருவரை தேர்ந்தெடுக்கும் பணிக்கு சர்ச்சைக்குரிய பாஜ ஆதரவாளரை பொறுப்பாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே, பேராசிரியர் ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்து, புதிய தேடுதல் குழுவை நியமிக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக்: தமிழக பல்கலைக்கழகங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் நடைமுறையே முன்பு இல்லாத நிலையில், தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக, குழு தலைவர்களாக நியமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவராகக கூட வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் ஒருவரே துணை வேந்தராக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பணிகளுக்கு தமிழக கல்வியாளர்கள் மத்தியிலேயே கடும் போட்டி இருந்த நிலையில், அவர்களை புறக்கணித்துவிட்டு, வெளிமாநில கல்வியாளர்களை நியமனம் செய்வது தமிழக கல்வியாளர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.

Related Stories: