ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கலாம்: மக்களவையில் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

டெல்லி: ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இறுதி முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்திருக்கிறார். ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் கணேசன் மூர்த்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஒரு கேள்வி ஒன்றினை முன்வைத்துள்ளனர். அதாவது அண்மை காலங்களில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கக்கூடிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மற்றும் மக்களின் கருத்து கேட்பு அவசியமில்லை என்ற A பிரிவிலிருந்து B 2 பிரிவிற்கு நீங்கள் மாற்றியுள்ளனரா? அவ்வாறு மாற்றப்பட்டிருந்தால் எந்த அடிப்படையில் இத்தகைய பிரிவிற்கு மாற்றுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கக்கூடிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடந்த ஜனவரி 16ம் தேதி இதுபோன்ற இயற்கை ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி திட்டங்கள், A பிரிவிலிருந்து B 2 பிரிவிற்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் ஆய்வுக்காக தொடங்குகின்ற போது மாநில அரசின் கீழ் இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்து அவர்களின் அனுமதியை  பெற வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களின் முடிவு தான் இறுதியானது என தெரிவித்துள்ளார். இது தவிர எந்தவொரு  குறிப்பிட்ட இடத்திலும், குறிப்பிட்ட ஒரு திட்டத்தை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது சம்பந்தப்பட்ட மாநில அரசின் இறுதி முடிவு என்பதையும் மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்ல, நீர் மற்றும் காற்று சட்டங்கள் உள்ளது. குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டியது கட்டாயம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு மாநில அரசின் அனுமதி கட்டாயம். அவர்கள் எடுக்கின்ற முடிவே இறுதியானது என்பதை மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: