கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!

கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி, சோமனூர் ஆகிய பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்றைய தினம், கோவை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தை சனிக்கிழமை ஒத்திவைப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்திருந்தார்கள். அதேவேளையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடையடைப்பானது அறிவித்தபடி நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாவட்டத்தின் புறநகர் பகுதியான சோமனூர், கருமத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் காலை முதலே அடைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு வழக்கமான வர்த்தகமானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதேவேளையில் நாளை, கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் போராட்டமானது நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டு ஏ.டி.ஜி.பிகள் தலைமையில் 1500 போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர். நாளையத்தினம் நடக்கக்கூடிய முழுஅடைப்புக்கு பின்பாக காவல்துறையினர் அங்கிருந்து விளக்கிக்கொள்ளப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கபட்ட சம்பவம்:

கோவை போத்தனூர் கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்த். இந்து முன்னணி  மாவட்ட செயலாளரான இவர், நேற்று முன்தினம் இரவு காந்திபுரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர்  பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல் போடப்பட்டது. இதை கேள்விப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நள்ளிரவு மேல்சிகிச்சைக்காக ஆனந்த், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிலவுவதால் 300 அதிரடிப்படை போலீசார் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: