கோவையில் போலீஸ் போல் நடித்து மொபைல்போன், பணம் பறித்த போலி எஸ்.ஐ., கைது

கோவை : கோவையில், போலீஸ் போல் நடித்து மொபைல்போன், பணம் பறித்த போலி எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சூரங்குடியை சேர்ந்தவர் பாண்டிகுமார் (31).  நேற்று முன்தினம், கோவை, சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் பாண்டிகுமாரை, தடுத்து நிறுத்தினார். வாகன ஓட்டுனர் உரிமங்களை கேட்டவர், பாண்டிகுமார் கஞ்சா கடத்தியதாக, வழக்கு பதிவு செய்ததாக மிரட்டி, 1,000 ரூபாயை பறித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாண்டிகுமார், சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்நிலையில், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ., சீருடையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காத்துக்குழியை சேர்ந்த ராஜன் மகன் வினோத் (29), என்பது தெரியவந்தது.

இவர் தான், பாண்டிக்குமாரை மிரட்டி பணம் பறித்த போலி எஸ்.ஐ., எனத் தெரிந்தது.மேலும், சில நாட்களுக்கு முன், மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த திருப்பூர் ஊமச்சிகுளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரீஸ்வர கண்ணனை மிரட்டி, 5 ஆயிரம் ரூபாயை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருப்பதும், பின்னர், இதே போல், சரவணம்பட்டி தனியார் விடுதியில் புகுந்து கஞ்சா இருப்பதாக, ரெய்டு நடத்தி, மொபைல்போன்கள் மற்றும் பணம் பறித்து தப்பிய வழக்கிலும்,  இவர் தேடப்பட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், வினோத்குமாரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: