டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி கொலை ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் கைது

புதுடெல்லி: டெல்லியில் நடந்த வன்முறையின்போது, மத்திய உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் சிஏஏ.வை எதிர்த்தும் ஆதரித்தும் நடந்த போராட்டத்தில், பெரும் வன்முறை வெடித்தது. இதில் 47 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது, மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) அதிகாரி அங்கித் சர்மா, உடல் முழுக்க கத்திக்குத்து காயங்களுடன் கழிவுநீர் கால்வாயில் பிணமாக கிடந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மகனை கொன்றது, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் என்று மீது அங்கித் சர்மாவின் தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். முதலில் இதை மறுத்த தாஹிர் உசேன், பின்னர் திடீரென காணாமல் போனார்.

இதனால் அவரை கைது செய்வதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி ஆம் ஆத்மி உத்தரவிட்டது. இதற்கிடையே, போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, நீதிமன்றத்தில் சரணடைய தாஹிர் உசேன் முயற்சி எடுத்து வந்தார். இதன்படி, கூடுதல் தலைமை பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிபதி விஷால் பகுஷா முன்பு தாஹிர் உசேன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது வக்கில் முகேஷ் காலியா இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் வாதிடுகையில், ‘‘தாஹிர் உசேன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அவர் நீதிமன்றத்தின் சரணடைவதற்காக வந்துள்ளார்’’ என்றார். ஆனால், இந்த கோரிக்கையை மாஜிஸ்திரேட் விஷால் பகுஷா ஏற்க மறுத்துவிட்டார். இது சிறப்பு நீதிமன்றம் என்பதால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி அறிவுறுத்தினார். இந்நிலையில், தாஹிர் உசேன் நீதிமன்றத்திற்கு வந்திருப்பது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: