ராமதாசுக்கு 14ம் தேதி பாராட்டு விழா: அன்புமணி அறிவிப்பு

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: 2018 ஜனவரி 20ம் தேதி சென்னையில் உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்களை பாமக நிறுவனர் நிறைவேற்றினார். அதே ஆண்டின் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தொடங்கி நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வழியாக சிதம்பரம் வரை காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கும் பயணத்தை மேற்கொண்டேன்.   மக்களவை தேர்தலுக்குப் பிறகு பிரதமரை ஒருமுறை டெல்லியில் சந்தித்தும், முதலமைச்சரை ஒருமுறை அவரது இல்லத்தில் சந்தித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, என்னை இருமுறை முதலமைச்சரை சந்திக்க வைத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தச் செய்ததுடன், இதே கோரிக்கைக்காக இருமுறை முதலமைச்சருக்கு கடிதமும் எழுத வைத்தார்.  காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கிக் கொடுத்த பா.ம.க. நிறுவனருக்கு உழவர் அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் 14ம் தேதி சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெறும். விழாவில் பாமக நிறுவனருடன், நான், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: