உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ்: ஈரானில் 54, 000 சிறை கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு!

தெஹ்ரான்: உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் காரணமாக ஈரானில் தற்காலிக சிறைக்கைதிகளாக உள்ள 54 ஆயிரம் பேரை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 6 கண்டங்களில் 80 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளதால் அந்நாடு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வூஹான் நகரில் இருந்து இந்த வைரஸ் பரவிய போதிலும், சீன அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் மக்கள் எந்தவித பதற்றமும் இன்றி காணப்படுகின்றனர்.

பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 77 பேர் உயிரிழந்த நிலையில், 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். ஈரான் சிறையில் கொரோனா பரவும் ஆபத்தை தடுக்க தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்திருக்கிறது. சிறை கைதிகளின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை 120க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கலிஃபோர்னியாவில் மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: