வங்கத்தில் பிறந்த இளம் இலக்கிய மேதை: இன்று (மார்ச் 4) எழுத்தாளர் தோருதத் பிறந்த தினம்

இன்று நாம் எத்தனையோ மொழிகள் கற்கிறோம். பேசுகிறோம். ஆனால், 18ம் நூற்றாண்டிலேயே ஒரு இந்திய பெண் கவிஞர் ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் கவிதைகள் எழுதி அசத்தி உள்ளார். அவர்தான் தோரு தத். 1856ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் கோவிந்த் சந்திர தத் - ஷேத்ரமோனி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தோரு தத். ஆங்கிலோ - இந்தியர். இவர்கள் குடும்பத்திற்கு பிரபல எழுத்தாளரான ரொமேஷ் சந்திர தத் மிகவும் நெருக்கமான உறவினர். அப்போது வங்கத்தில் ஆங்கில மொழியை வசதி படைத்தவர்கள் கற்று வந்தனர். அந்த வகையில் கோவிந்த் சந்திர தத், மகள் தோரு தத்துக்கு வீட்டிலேயே ஆங்கிலக்கல்வியை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க வைத்தார். இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் புலமையை வெளிப்படுத்தினார் தோரு தத்.

பின்னர் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்ச் மேற்படிப்பு படித்தார். வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்ச் என 3 மொழிகளிலும், கதை, கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘ஸ்பானிய இளம்பெண்’ என்ற பொருள்படும் நாவலை ஆங்கிலத்திலும், ‘லி ஜானல் டி மேடு மோய் செல்லி டி ஆர்வெர்ஸ்’ என்ற நாவலை பிரெஞ்ச் மொழியிலும் எழுதினார். மேலும், பிரெஞ்ச் மொழியில் கவிதைத்தொகுப்பு மற்றும் இந்திய நாகரீகங்கள் குறித்து ஆங்கிலம், பிரெஞ்ச் மொழியில் எழுதி அசத்தினார்.இவரது, ‘பிரெஞ்சு வயலில் மிதமான கதிர் கற்றையை சேகரித்தது’ எனப்படும் ஆங்கில கவிதைத்தொகுப்பு 1876 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. துவக்கத்தில் இந்த கவிதைத் தொகுப்பிற்கு பெரிய வரவேற்பு கிட்டவில்லை. போகப்போக இத்தொகுப்பு மிகவும் பிரபலமானது. பின்னர் ‘பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற சமஸ்கிருத மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுப்புக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், நாவல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய ‘நம் சவுக்கு மரம்’ (our casuarina tree) என்னும் கவிதை நூல் பலத்த வரவேற்பை பெற்றது. இதில் தனது இளமைக்கால வாழ்க்கையையும், சவுக்கு மரத்துடனான தனது மற்றும் சமூகத்தொடர்பு அழகுபட விவரித்திருந்தார். ஆங்கிலம், பிரெஞ்ச் என இந்தியாவுக்கு மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும்,இந்திய பாரம்பரியம் காப்பதிலும் சிறந்தவராக திகழ்ந்தவர்.ஒருமுறை ஆங்கிலேயரின் நாய் கடிக்க வந்ததைத் தடுக்க முயன்ற இந்தியருக்கு, 3 வாரம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதை மிகவும் கடுமையாகச் சாடி, இவ்வாறு தண்டனை வழங்கிய நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டுமென குரல் கொடுத்தார். ஒருமுறை வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது, வாண வேடிக்கைக்காக மிகுந்த செலவு செய்ததையும் கடுமையாக கண்டித்தார்.இளம்வயதிலேயே இவரது உடல்நிலை பாதித்தது. அப்படிப்பட்டி சூழலிலும், ‘டிடர் எட் சி, லைப்ரரிஸ் - எடிடியூர்ஸ், 35 குவாய்டெஸ் அகஸ்டின்ஸ், பாரிஸ்’ என்ற 2 நாவல்களை பிரெஞ்ச் மொழியில் எழுதினார். பிரெஞ்ச் மொழியில் நாவல் எழுதிய முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

மாறுபட்ட சிந்தனைகளை எழுத்தில் கொண்ட தோரு தத், 1877ம் ஆண்டு, ஆக.30ம் தேதி, தனது 21வது வயதில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின் அவரது நாவல்கள், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஆங்கில, பிரெஞ்ச் மொழிகளில் பல அரிய நாவல்கள், கவிதைத்தொகுப்புகள் கிடைத்திருக்கும். இருப்பினும், இவருக்கு பின் வந்த எழுத்தாளர்களுக்கு இவரது படைப்புகள், ஒரு ஏணியாக இருந்து உதவியது என்றால் அது மிகையில்லை.

Related Stories: