அரசின் சொத்தான நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளிடம் கட்டணம் வசூலிக்கலாமே? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

* இன்று இடைக்கால உத்தரவு: மூடப்பட்ட ஆலைகளை திறப்பது குறித்து இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை: அரசின் சொத்தான நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளிடம் அதற்கான கட்டணத்தை வசூலிக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு யோசனை தெரிவித்து மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை திறப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டதுடன், நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.  அதில், தமிழகம் முழுவதும் மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உரிமத்தை புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளது.  இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும்.  அதற்கு கட்டணமாக ரூ.6000  வசூலிக்கப்படும் என்றார்.அப்போது, நீதிபதிகள், எப்படி சீல் வைப்பீர்கள். துணி மூலம் சீல் வைத்தால் என்ன பயன் என்று கேட்டனர். அதற்கு அட்வகேட் ஜெனரல், அடுத்த முறை கண்காணிக்கும்போது அவர்கள் தவறு செய்தால் தெரிந்துவிடும் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், அது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஆலைகளை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இயற்கை வளத்தை சுரண்ட ஒருவருக்கும் அனுமதி இல்லை. இதுவரை நடந்ததை பற்றி பேச தேவையில்லை. இப்போதிலிருந்து சட்ட விரோத குடிநீர் ஆலைகள் குறித்த ஒழுங்குமுறையை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றனர்.  இதையடுத்து, குடிநீர் ஆலைகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, மூடப்பட்ட ஆலைகள் சார்பில், குடிநீர் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதே தவிர, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கவில்லை. ஆலைகள் மூடி இருக்கும்போது எப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும். இந்திய தரச்சான்று நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம், வருமானவரித்துறை, உணவு தரம் மற்றும் கட்டுப்பாடு துறை ஆகியவற்றிடம் உரிய அனுமதியை பெற்ற பிறகே இந்த ஆலைகள் இயங்கி வருகின்றன. சென்னையில் 214 யூனிட்டுகளும், கோவையில் 150 யூனிட்டுகளும் இயங்கி வருகின்றன. இதில் சென்னையில் 41 யூனிட்டுகளுக்கும் கோவையில் 20 யூனிட்டுகளுக்கும் லைசென்ஸ் உள்ளது. மீதமுள்ள யூனிட்டுகள் லைசென்சை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.

  தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே இந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து வரும் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட ஆலைகள் எடுக்கும் தண்ணீர் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு செய்து வழங்கி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது என்றார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பல்வேறு விதமான ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா?   குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளின் வாயிலாக தெரியவந்தது. போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று  நினைத்தால் அது தவறு.

அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைத்ததை ஆய்வு செய்வதற்கு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கக் வேண்டும். நிலத்தடி நீர் அரசின் சொத்து. அதற்கு கட்டணம் வசூலித்தால் என்ன?  முறையாக உரிமம் பெற்று செயல்படும் ஆலைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசின் கவனத்திற்கு தெரியாமல் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. இயற்கை வளத்தை சுரண்டுவதற்கு ஒருவருக்கும் அனுமதி தரக்கூடாது என்றனர். ஆலைகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மாசிலாமணி வாதிடும்போது, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வரை மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரினார்.  இதையடுத்து, இந்த வழக்கில் நாளை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: