குடியுரிமை திருத்த சட்ட வழக்கு: ஐநா. மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், ஐநா மனித உரிமை ஆணையம், நீதிமன்றத்துக்கு உதவும் பணியில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டம் நடந்தது. ஆனால், அங்கு போராட்டம் அடங்கிய நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்டம் பரவியது. டெல்லியில் இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. இதில் 46 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல தரப்பினரால் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநா மனித உரிமை ஆணையம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

உள்நாடு விவகாரம் தொடர்பான வழக்கில், ஐநா மனித உரிமை ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கண்டனம்:  ஐநா.வின் செயல் பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி  தொடர்பாளர் ரவீஷ் குமார், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவின் உள்நாட்டு  விவகாரம். இதில் தலையிட யாருக்கும், எந்த  நாட்டிற்கும் உரிமை கிடையாது’ என்றார்.

Related Stories: