மேடவாக்கம் மேம்பால பணியின்போது 80 அடி உயரத்தில் இருந்து இரும்பு கம்பி ஐ.டி பெண் ஊழியர் மொபட் மீது விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

வேளச்சேரி: மேடவாக்கத்தில் மேம்பால பணியின்போது 80 அடி உயரத்தில் இருந்து 100 கிலோ எடை கொண்ட இரும்பு தடுப்பு விழுந்ததில் அவ்வழியாக சென்ற மொபட் சேதமடைந்தது. இதில் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேடவாக்கம் பகுதி வேளச்சேரி மெயின் சாலையில் மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் பெரும்பாக்கம் மெயின் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று மாலை ஊழியர்களின் அலட்சியத்தால் 80 அடி உயரத்தில் இருந்து 100 கிலோ எடை கொண்ட இரும்பு சட்டம் கீழே விழுந்தது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஐ.டி நிறுவன பெண் ஊழியரின் மொபட் மீது திடீரென விழுந்தது. இதில் அவரது வாகனம் சேதமானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அறிந்து வந்த ஐ.டி நிறுவன பெண் ஊழியரின் உறவினர்கள் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, புகாரளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: