சாலை, வாறுகால், கழிவறை வசதி இல்லை அடிப்படை வசதிக்கு ஏங்கும் கஞ்சநாயக்கன்பட்டி ராஜீவ்நகர் மக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதி இல்லாததால் ராஜீவ்நகர் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராமம். இங்குள்ள ராஜீவ் நகர் தெற்கு பகுதியில் பிள்ளையார்கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாரதி தெரு, கம்பன் தெரு, ராமசாமி தெரு, ஆவுடையம்மாள் தெரு, வடக்கு பகுதியில் மகாத்மாகாந்தி தெரு, பங்களா தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்த நகர் உருவாகி 25 வருடம் ஆகிறது. ஆனால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள வாறுகால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வாறுகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. ஒரு சில பகுதியில் வாறுகால் அமைக்கப்படாததால் ரோட்டில் பள்ளம் தோண்டி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் பகிர்மான குழாய் சீராக அமைக்கப்படவில்லை. இதனால் ஒருசில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை.  இதனால் வீடுகளில் உள்ள போர்வெல் மூலம் வரக்கூடிய தண்ணீரை தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாக புலம்புகின்றனர்.

பொது கழிவறை வசதி இல்லை. வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்கள்  திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் தெருக்களின் நுழைவு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. திருச்சுழி ரோட்டில் உள்ள மெயின் ஓடை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதுடன் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. ராமசாமி தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் இதுபோன்ற சேதமடைந்த மின்கம்பங்கள் பல உள்ளன. மின்கம்பத்தை மாற்ற  மின்வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ராஜீவ்நகர் வடக்கு பகுதியிலும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. மினிபவர் பம்ப் மற்றும் அடிகுழாய் வசதி இல்லை.  தெருவிளக்குகள் முறையாக அமைக்கப்படவில்லை. மின்விளக்குகள் எரியாததால் இருள்மூழ்கி கிடக்கிறது. இதனால் திருட்டுப்பயம் உள்ளது.  எனவே அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ராஜீவ்நகர்  தெற்கு, வடக்கு பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: