பூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

பூச்சியுண்ணும் தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள் (Carnivorous Plant) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறு விலங்குகள், பூச்சிகள் அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன. இத்தாவரங்கள் பெரும்பாலும்  பூச்சிகளையும் கணுக்காலிகளையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றபடி இத்தாவரங்கள் சிறப்பான வடிவங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றுள்ளன. இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு வகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துவிடுகிறது. ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளைத் தாவரம் சீரணித்துக்கொள்கிறது. பொதுவாக ஊட்டச்சத்துகள் (குறிப்பாக நைட்ரஜன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் வளர்கின்றன. எனவே, பூச்சிகளின் உடலிலுள்ள புரதத்திலிருந்து நைட்ரஜனை  பெறுகின்றன.

ஹூக்கர் (J.D.Hooker) என்ற தாவரவியல்  அறிஞர் ‘பூச்சிகளைச் செரிப்பது என்பது  விலங்குகளைப் போல தாவரங்களிலும் நடக்கிறது. மனிதனில் வயிற்றில் சுரக்கும் நொதிகள் போல தாவரங்களிலும் சுரக்கிறது’ என்றார். பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரங்கள் ஆறு குடும்பங்களை உள்ளடக்கி 16 பேரினத்துடன் சுமார் 450 வகைச் செடிகளையும், 30-க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களும் 39 வகைச் செடிகளும் உள்ளன. இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை. செரிக்க வைக்கும் நொதி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக்கொண்ட உருண்டை இலைகள் மூலம் பிடித்தல்; பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்; இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்; வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்; செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்நோக்கிய முட்களைப் பயன்படுத்திப் பிடித்தல் போன்ற வகைகளில் பூச்சிகளை உண்ணுகின்றன.

Related Stories: