இதுவரை இல்லாத வகையில் 16 அடுக்குமாடிக்கு சமமான 170 அடி உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டை விண்ணில் ஏவும் இஸ்ரோ

பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு மையம் இதுவரை இல்லாத வகையில் அதிக உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டை  நாளை மறுநாள் விண்ணில் ஏவுகிறது. புவி கண்காணிப்புக்கு உதவும் அதி நவீன ஜிஅய்சாட் 1 செயற்கை கோளை தாங்கிச் செல்லும்  ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டை நாளை மறுநாள் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 5ந் தேதி மாலை 5.43 மணிக்கு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்நிலையில் , ஜிஅய்சாட் -1 அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டின் உயரம் 170 அடி ஆகும். கிட்டத்தட்ட 16 அடுக்குமாடிக்கு சமமானதாகும். இஸ்ரோ சார்பில் இதுவரை ஏவப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளிலேயே இது தான் மிக அதிக உயரம் கொண்டதாகும். இது  2 ஆயிரத்து 275 கிலோ எடை கொண்டதாகும். இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட 167 அடி உயரம் உள்ள  ஜிஎஸ்எல்வி எஃப்-11 தான் அதிக உயரம் கொண்டதாக கருதப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட் இதுவாகும்.

இஸ்ரோ தயாரித்த ஜிஅய்சாட்

பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள்(ஜிஅய்சாட்) தயாரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக ஜிஅய்சாட்- 1 மார்ச் மாதமும், ஜிஅய்சாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.

Related Stories: