திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் தமிழக பெண் எம்பி தடுத்து நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக  பாஜ.வைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா நேற்று முன்தினம் இரவு திருப்பதி வந்தார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்காக அலிபிரி சோதனைச் சாவடி வந்தபோது, அங்கிருந்த தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் அவரது காரை சோதனை செய்தனர். அப்போது பாஜ சின்னமான தாமரை ஸ்டிக்கர் காரில் ஒட்டி இருந்தது. அந்த ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் எனவும், காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை படம்பிடித்த  கார் டிரைவர் செல்போனை விஜிலன்ஸ் ஊழியர்கள் பறித்துக்கொண்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சசிகலா புஷ்பா, நேற்று காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வீடியோ ஆதாரங்களுடன் ஆந்திர டிஜிபியிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலன்ஸ் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சசிகலா புஷ்பா தங்கிருந்த இடத்துக்கு வந்து நடந்த தவறை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனால் இரு தரப்பும் சமாதானம் ஆனது.

Related Stories: