மகாதீரின் கடும் எதிர்ப்புக்கு இடையே மலேசிய பிரதமராக யாசின் பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் 8வது பிரதமராக முன்னாள் உள்துறை  அமைச்சர் முகைதீன் யாசின் நேற்று பதவியேற்றார். மலேசியாவில் 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது, அன்வர்  இப்ராகிமின் `நம்பிக்கை கூட்டணி’ வெற்றி  பெற்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி ஒப்பந்தப்படி முதல் 2 ஆண்டுகள் பிரதமர் பதவியை மகாதீர் வகித்தார். சமீபத்தில் அவருடைய 2 ஆண்டு  பதவிக் காலம் முடிந்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கான பிரதமர் பதவியை அன்வருக்கு அவர் விட்டு கொடுத்திருக்க  வேண்டும்.

ஆனால், அன்வருக்கு பதவியை  விட்டுக் கொடுக்க மனம் இல்லாத மகாதீர், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து  ஆட்சி அமைக்கும் எண்ணத்தில், கடந்த வாரம் தனது பதவியை திடீரென ராஜினாமா  செய்தார். அதன் பிறகு, மகாதீரும்,  இப்ராகிமும் தனித்தனியே மீண்டும் கூட்டணி  ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, புதிய  திருப்பமாக எதிர்க்கட்சியான மலேசிய ஐக்கிய சுதேசி கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசினை (72) புதிய பிரதமராக  மன்னர் அல் சுல்தான் நேற்று முன்தினம்  அறிவித்தார். நேற்று அவர், கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் நடந்த விழாவில், மலேசியாவின் பாரம்பரிய உடையுடன் வந்து நாட்டின் 8வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையே, மகாதீர் தலைமையிலான கூட்டணி  அரசு வெளியேற்றப்பட்டதால், மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அதனால், டிவிட்டரில் `நாட்  மை பிஎம்’ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், `2018ம் ஆண்டு  வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு இழைத்த துரோகம்’ என்றும், அதற்கு  ஆதரவு தெரிவித்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: