அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் தெ.கரோலினாவில் ஜோ பிடென் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று நடந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. அமெரிக்காவில்  அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர்மானிக்க, முதலில் கட்சிக்குள்ளேயே தேர்தல் நடக்கும். இதை ‘பிரைமரி’ என்கிறார்கள். அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல்தான், தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் பிரதிநிதிகள்  வாக்களித்து பெரும்பான்மை ஆதரவு பெறுகிறவர்களை வேட்பாளராக அறிவிப்பர். ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் (77), சென்ட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் (78), பீட் புட்டிகீக் ஆகியோர்  உட்பட பலர்  உள்ளனர். லோவா, நியூ ஹேம்சயர், மற்றும் நெவடா மாகாணங்களில் நடந்த வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடென் தோல்வி அடைந்தார். நியூ ஹேம்சயர், நெவடாவில் நடந்த தேர்தலில் சாண்டர் வெற்றி பெற்றார். லோவாவில் சாண்டர்சும், பீட் புட்டிகீக்கும்  சம ஓட்டுகளை பெற்றனர்.  

இந்நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில் நேற்று நடந்த ஜனநாயக உட்கட்சி தேர்தலில் ஜோ பிடென், மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை பெற்று வெற்றி பெற்றார். 17 சதவீத வாக்குகளை பெற்று சாண்டர்ஸ் இரண்டாவது இடத்தில்  உள்ளார். உட்கட்சி தேர்தலில் ஜோ பிடென் முதல் வெற்றியை பெற்றுள்ளது, அவரது பிரசாரத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி குறித்து தனது ஆதரவாளர்களுக்கு ஜோ பிடென் அனுப்பியுள்ள இ-மெயிலில், ‘தெற்கு கரோலினாவில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த வாரம் நெவடாவில் நடந்த பிரசாரத்திலேயே நமது வெற்றி தொடங்கிவிட்டது என  கூறினோம். அதை தெற்கு கரோலினா நடத்தி காட்டியுள்ளது,’ என குறிப்பிட்டுள்ளார்.பெர்னி சாண்டர்ஸ்க்கு ஜனநாயக கட்சியில் 45 பிரதிநிதிகளின் ஆதரவு உள்ளதால் அவரே இன்னும் முதல் இடத்தில் உள்ளார். தெற்கு கரோலினா வெற்றி மூலம் ஜோ பிடனுக்கு பிரதிநிதிகளின் ஆதரவு 29 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் அவர் 2ம் இடத்தில் உள்ளார். நாளை மறுதினம் அமெரிக்காவின் 15 மாநிலங்களில் ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடக்கிறது. பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்களை ஜனநாயக கட்சியின் தேசியக் குழு வேட்பாளராக  தேர்ந்தெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் உள்ள அதிபர் டொனல்டு டிரம்ப்புக்கு 86 பிரதிநிதிகளின் ஆதரவு உள்ளது. 2ம் இடத்தில் உள்ள பில் வெல்டுக்கு ஒரே ஒரு பிரதிநிதியின் ஆதரவு மட்டுமே உள்ளது.

Related Stories: