கரசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் கரசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கல் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரிசங்கல் குட்டை என்ற நீர்நிலை அமைந்துள்ளது. அந்த குட்டையை 2014ம் ஆண்டில் பஞ்சாயத்து தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது ஆட்கள் மணலை கொட்டி ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீர்நிலை மீதான இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நந்தகோபால், புருஷோத்தமன், கோபிநாத் ஆகியோர் காஞ்சிபுரம் கலெக்டரிடம்  மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, அங்கு பிரச்னையும், தகராறும் ஏற்பட்டது. இது தொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில்  வருவாய் ஆய்வாளர் புகார் அளித்தார். அதில், ஆக்கிரமிப்பு எனக் கூறி, அதை அகற்ற வேண்டுமென்று புகார்தாரர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் புகார் கொடுத்த 3 பேரும் கைதாகி அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வககீல் திருமூர்த்தி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்பவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதாக வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்ததுடன், கரசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மீட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: