மாசி பெருவிழாவை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: பலத்த கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி பெருவிழா வெகு விமரிசையாக கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாசி பெருவிழாவில் மயான கொள்ளை தீமிதி போன்ற பெருவிழாக்கள் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 7ம் நாள் விழாவாக பிரமாண்ட தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், புஷ்பம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்து பின்னர் உற்சவர் அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிலையில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பிற்பகல் உற்சவர் அங்காளம்மனுக்கு தீப ஆராதனை செய்து மேளதாளத்துடன் பம்பை உடுக்கை ஓசையுடன் வடக்குவாசல் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார தேரில் அம்மனை அமர வைத்தனர். பின்னர் பக்தர்கள் பக்தி பரவசத்தில் அங்காளம்மா தாயே அருள் புரிவாயே என பலத்த கோஷத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோயிலை சுற்றி வலம் வந்த தேரில் ஆக்ரோஷமாக அமர்ந்திருந்த அம்மனை தேவர்கள், ரிஷிகள் அமர்ந்து அம்மனை சாந்தப்படுத்தவே இவ்விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது திருத்தேரின் மீது பக்தர்கள் பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள், சில்லரை காசுகளை போட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர்.

மாசி பெருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், கோயில் உதவி ஆணையர் ராமு மற்றும் மேற்பார்வையாளர் செண்பகம், மேலாளர் மணி, சதீஷ், அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இத்தேரோட்டத்தை காண்பதற்காக தமிழக போக்குவரத்து விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்பட்டன. மேலும் வளத்தி சுகாதார நிலைய மருத்துவர் குணசுந்தரி தலைமையில் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு, பணியில் ஈடுபட்டனர். இத்தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Stories: