சென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு

சென்னை: தமிழக பாஜ சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இருந்து தலைமை செயலகம் நோக்கி  பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பாஜவினர்  நேற்று மாலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார்.நடிகர் ராதாரவி, பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர் எம்.ஜெய் சங்கர், பாஜ இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் தர், கருப்பையா, இளைஞரணி செயலாளர் ஜி.சுரேஷ் கர்ணா, மீனவரணி தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

ஆர்ப்பாட்டம் முடிவில் பாஜ நிர்வாகிகள் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: 130 கோடி இந்தியர்களுக்கும் குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று  தெள்ளத்தெளிவாக பிரதமர் உறுதிபட கூறியுள்ளார். தமிழக முதல்வரும் இந்த சட்டத்தினால் ஒருநபர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். பொய் பிரசாரத்தை பரப்பி தமிழகத்தில் கலவரம் ஏற்பட வேண்டும்  என்ற ஒரே குறிக்கோளுடன் சிஏஏ எதிர்ப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் பேரணிகளை பெண்களையும், குழந்தைகளையும் பங்கெடுக்க வைத்து தொடர்ந்து தமிழகமெங்கும் முன்நிறுத்தி நடத்தி வருகிறார்கள். அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் தீய சக்திகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின்  போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: