மரக்காணம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக நவீன முறையில் சிவன் கோயில் இடமாற்றம்

மரக்காணம்: மரக்காணம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நவீன முறையில் சிவன் கோயில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு உரிய ஏற்பாடு செய்து அதற்கான இடம் கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மரக்காணம் அருகே செட்டி நகர் பகுதியில் இசிஆர் சாலையோரம் அமைந்துள்ளது தர்மலிங்கேஸ்வரர் கோயில். இந்த கோயில் முழுவதும் சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் உள்ளது. இதனால் இந்த கோயிலை இடிக்காமல் அப்படியே இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 60 மீட்டர்  தூரத்துக்கு பின்னோக்கி இழுத்து கோயில் அமைக்க கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இந்த பணியை செய்ய மும்பையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினரை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் முதல் கட்டமாக கோயிலை சுற்றிலும் சுமார் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சுமார் 1000 நவீன ஜாக்கிகள் பொருத்தி பின்னோக்கி இழுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் முதல் கட்டமாக சுமார் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: