தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை வெளியீடு..!

சென்னை: தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ள பரப்பினை 33 விழுக்காடாக அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மரம் மற்றும் மரம் சார்ந்த காகிதம், ஒட்டுப் பலகை, எரிசக்தி போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வனங்களுக்கு வெளியேயுள்ள மரங்களின் பரப்பளவை அதிகரித்து இந்த இலக்கினை அடைந்திட வேளாண் காடுகள் வளர்ப்பு முறைகள் பெருமளவு ஊக்குவிக்கப்படுகின்றன.

விளைநிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து, உழவர்களின் வருமானம் உயர்ந்து அவர்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் உயர் மதிப்பு கொண்ட தேக்கு, சந்தனம், செம்மரம், ஈட்டி போன்ற மர இனங்களை உழவர்கள் தங்கள் வயல்களிலேயே பயிரிட்டுப் பயன்பெறவும், அதற்குத் தேவையான வனச் சட்டங்களிலுள்ள விதிகளை எளிதாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரித்து, பசுமை சூழ்நிலையினை உருவாக்கிடவும், நீடித்து நிலைக்கத்தக்க வேளாண் காடு வளர்ப்பில் தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றிடும் வகையில் “தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

உயர் மதிப்பு கொண்ட மரங்களை வேளாண் நிலங்களில் வளர்ப்பது, அவற்றை வெட்டி எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், சிறப்பு வேளாண் காடு வளர்ப்பு மண்டலங்களை ஏற்படுத்துதல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கார்பன் சேமிப்பை அதிகரித்தல், தரிசு நிலங்களை மீள சாகுபடிக்குக் கொண்டுவருதல், தரமான மரக்கன்றுகளை உழவர்களுக்கு வழங்குதல், வனப்பொருட்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற சந்தை இணைப்புகளை ஏற்படுத்துதல், நிலத்தடிநீர், பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், உணவு, பசுந்தீவனம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேளாண் காடுகள் குறித்த பயிற்சி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் ”தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026”-இல் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: