பெரம்பூர்: தேர்தலை மையப்படுத்தாமல் மக்கள் பணிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி சார்பில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் புதிய கட்டுமான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் சாலையில் கட்டப்பட்டுவரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு, அண்ணா பிள்ளை தெருவில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுவரும் ரத்த சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் மற்றும் 700 அடுக்குமாடி குடியிருப்புகள் (முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்), விளையாட்டுத் திடல், மாநகராட்சி அச்சகம் மற்றும் சமுதாய நலக்கூடம் (முதல்வர் திருமண மாளிகை) என “ஒருங்கிணைந்த வளாகத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். கொளத்தூரில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி அலுவலகக் கட்டிட பணிகள் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, திருவிக. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக் உள்பட பலர் இருந்தனர்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது; விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள், சிஎம்டிஏ சார்பில் இன்னும் எத்தனை பணிகள் முடிவடைய இருக்கிறது? வரும் 8ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 பணிகளை துவக்கிவைக்க இருக்கிறார். அதில் பெருநகர மாநகராட்சி பணிகள் 4, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பணிகள் 6 என்று 10 பணிகளை தொடங்கி வைக்கின்றார். தேர்தல் தொடங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலை மையப்படுத்தாமல் மக்கள் பயன்பாட்டிற்கு எது முக்கியமானதோ அவசியம் என்று கருதுகிறோமோ அதை திறப்பு விழா என்று போர்வை இல்லாமல் அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது இருக்கக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கூட பணிகள் நிறைவடைந்தவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். தேர்தலுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக மேயர் பிரியா கூறியதாவது;
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் மண்டலம் 6க்கு உட்பட்டஆட்டிறைச்சி கூடத்தை நவீனப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பணிகள் மேற்கொள்ளும்போது நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் சட்டப்போராட்டம் நடைபெற்று அதற்கு தீர்வு காணப்பட்டு மிகவும் அதிக நவீனமுறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கூடம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினார்.
