டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரிப்பு: 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்

டெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்திருந்த நிலையில் வன்முறையில் படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களின்போது கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 

இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று காலை வரை, தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் மேலும் 5 பேர் உயிரிழந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் ஒருவர் இறந்தார். இதன்மூலம், வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  டெல்லி வன்முறை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.

Related Stories: