உபி. தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் மோசடி: எம்பி அசம்கான், மனைவி, மகனுக்கு நீதிமன்ற காவல்

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் அளித்த வழக்கில், சமாஜ்வாடி எம்பி அசம்கான், அவரது மனைவி மற்றும் மகனை வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் மூத்த தலைவராகவும், எம்பி.யாகவும் இருப்பவர் அசம்கான். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இவருடைய மனைவி தாஜின் பாத்திமா ராம்பூர் தொகுதியிலும், மகன் அப்துல்லா அசம்கான் சோர் தொகுதியிலும் சமாஜ்வாடி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அப்போது, வேட்பு மனுவுடன் போலி பிறப்பு சான்றிதழ் அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அசம்கான், மனைவி பாத்திமா, மகன் அப்துல்லாவை மார்ச் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்து சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `இது ஆளும் பாஜ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இதை சமாஜ்வாடி ஒரு பொருட்டாக கருதாது. அரசு ஒரு தலைபட்சமாக நடக்கக் கூடாது. நீதித்துறை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு நீதி கிடைக்கும்’ என்று கூறியுள்ளது. அதே நேரம், `அசம்கான் ஏழைகளிடம் இருந்து சுரண்டினார். அவரை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று மாநில பாஜ தெரிவித்துள்ளது.

Related Stories: