பேரவை மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது: மானிய கோரிக்கை மீது 20 நாள் விவாதம்

சென்னை: தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், மீண்டும் வருகிற மார்ச் 9ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் நேற்று அறிவித்தார். இந்த  கூட்டத்தொடரின்போது துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.தமிழக அரசு சார்பில் 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் கடந்த  17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில்தான், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.அதேபோன்று, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை  வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் சட்டப்பேரவையில் குரல் எழுப்பப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும், தமிழக அரசு இந்த கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கடந்த 20ம் தேதி மாலையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற மார்ச் 9ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் மாதம் 9ம் தேதி, திங்கட்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர்  கூட்டியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.இந்த சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்தும், எந்தெந்த தேதியில் எந்த துறை மீது விவாதம் நடைபெறும் என்பதுகுறித்தும் வருகிற மார்ச் 2ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படுகிறது.அதன்படி, வருகிற மார்ச் மாதம் 9ம் தேதி முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து மார்ச் மாதம் இறுதி வரை அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை,  நெடுஞ்சாலை துறை, வனத்துறை, கல்வி, மின்சாரம், உள்ளாட்சி, கூட்டுறவு, மீன்வளத்துறை, உணவு, தொழில், சட்டம், சமூகநலத்துறை, போக்குவரத்து, சுகாதாரம், வேளாண்மை, ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை,  கால்நடை உள்ளிட்ட ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடைபெற்று அந்தந்த துறைகளுக்கு இந்த ஆண்டுக்கான (2020-2021) நிதி ஒதுக்குவது குறித்து சட்டப்பேரவையில் அனுமதி வழங்கப்படும்.

அதேநேரம், எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த துறைகளில் கடந்த ஆண்டு சொன்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளதில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதம் நடைபெறும். மேலும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குடியுரிமை திருத்த  சட்டத்தின் மூலமாக நடைபெறும் போராட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கல்வி பாதிப்பு, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள், குடிநீர் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து பிரதான  எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். இதனால், மார்ச் 9ம் தேதி முதல் சுமார் 20 நாட்கள் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது.

அறிவிப்புகள் வரலாம்

தொடர் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால், இந்த கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ்  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: