தேவாரம்-உத்தமபாளையம் சாலையில் அதிக வேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத போலீசார்

உத்தமபாளையம்: தேவாரம்-உத்தமபாளையம் சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள பண்ணைப்புரம், பொட்டிப்புரம், புலிகுத்தி, மார்க்கையன்கோட்டை, கோம்பை, தேவாரம் உள்ளிட்ட ஊர்களை சுற்றி அரசு அனுமதி பெற்ற 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் மணல் ஏற்றுவதற்கு டிப்பர் லாரிகளை பயன்படுத்துகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரிகள் தேவாரம், உத்தமபாளையம், கோம்பை, உ.அம்மாபட்டி சாலைகளில் அதிக வேகத்தில் வருகின்றன. இதனால், டூவீலர்களில் வருபவர்களும், சிறிய வாகனங்களில் வருபவர்களும் அச்சத்தில் வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் அதிக வேகமாக செல்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் லாரிகளுக்கு விதிவிலக்கா?

தேவாரம், கோம்பை, பாளையம், கம்பம், சின்னமனூர் என மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் ஹெல்மெட் போடாமல் டூவீலர்களை ஓட்டி வரக்கூடியவர்களை நிறுத்தி, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதேவேளையில் அதிக பாரம், அதிக வேகம், சாலை விதிகளை மீறி பயணிக்ககூடிய மணல் லாரிகள் அனுமதி சீட்டை வைத்துள்ளோம் என்று சொல்லி செல்கின்றன. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: