கீழடியில் அகழாய்வு பொருட்களின் புகைப்பட கண்காட்சி: 6ம் கட்ட அகழாய்வை பார்வையிடுபவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!

சிவகங்கை: கீழடியில் அகழாய்வில் கிடைத்த தொன்மை வாய்ந்த பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சி தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. கீழடி 6ம் கட்ட அகழாய்வை பார்க்க வருபவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்து தெளிவான தகவலானது புகைப்படம் வாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. கீழடியில் அகழாய்வில் கிடைத்த வட்ட பானை, சூதுபவலம் உள்ளிட்ட பொருட்களின் புகைப்படம் மற்றும் அவற்றின் தகவல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அகழாய்வை பார்வையிட வருபவர்கள் கண்காட்சியை ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து அங்குள்ள பார்வையாளர் ஒருவர் தெரிவித்ததாவது, கீழடி அகழாய்வு மிகவும் தொன்மையானது. தமிழின் பெருமையும், தமிழரின் பண்டைய கால வாழ்க்கை முறையை தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் இந்த அகழாய்வாராய்ச்சி அமைந்துள்ளது.

நீண்ட நாட்களாக இந்த அகழ்வாராய்ச்சியை பார்க்க திட்டமிட்டு தற்போது தான் அதற்கான சூழல் அமைந்துள்ளது. கீழடி அகழாய்வில் தொன்மை வாய்ந்த பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் கீழடியில் கிடைத்த பொருட்களை நேரடியாக பார்க்க முடியவில்லை என்பதே சிறிது வருத்தம் என தெரிவித்தார். கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை பானை ஓடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. கீழடியில் ஏற்கனவே கிடைத்த பொருட்கள் மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: