மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லை வறட்சியால் குரங்கு அருவி மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி துவக்கத்தால், நேற்று முதல் குரங்கு அருவி மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பெய்த பருவ மழையால், கடந்த ஆண்டு ஜூலை முதல் குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.  அப்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர்.  ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக மழை இல்லாததால், குரங்கு அருவியில் தண்ணீர் குறைய ஆரம்பித்தது. இந்த மாதத்தில்  தண்ணீர் வரத்து மிகவும் குறைவால் அங்கு வந்த  சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர். கடந்த சில நாட்களாக குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் வெறும் பாறையாகவே காட்சியளிக்கிறது.

  இந்நிலையில் மழையின்றி வறட்சி துவக்கத்தால், நேற்று முதல் குரங்கு அருவி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து குரங்கு அருவிக்கு செல்லும் வழியில் வனத்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தினர். நேற்று சில சுற்றுலா பயணிகள் குரங்கு அருவிக்கு வந்தனர். ஆனால், வனத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பினர்.  மழைபெய்து தண்ணீர் அதிகளவு வந்தால் மட்டுமே, குரங்கு அருவிக்கு  சுற்றுலா பயணிகள் அனுமதிக்கான தடை நீங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: